சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் சிற்பம் மற்றும் திருநடை கதவுகள் ஆகியவற்றில் செம்பு தகட்டின் மீது பதிக்கப்பட்டிருந்த தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. அந்த வழக்கில் உன்னிகிருஷ்ணன் போற்றி, சபரிமலை கோயில் முன்னாள் அதிகாரிகள், சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கேரளாவில் நடந்துமுடிந்த உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின்போது தங்கம் கொள்ளைக்கு எதிராக சி.பி.எம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசை கிண்டலடித்து ஒரு பாடல் வெளியானது. பள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை… என்ற பிரபல ஐயப்ப சுவாமி பாடல் மெட்டுக்கு ஏற்ப பாடப்பட்ட அந்த பாடலில், உன்னிகிருஷ்ணன் போற்றியை சபரிமலைக்கு அனுப்பி தங்க தகடுகளை கொள்ளையடித்தவர்கள் சகாவுகள் என்பதை குறிக்கும் வகையில் அந்த பாடல் வரிகள் இடம்பெற்றிருந்தன. அந்த பாடலில், ‘போற்றியே கேற்றியே சொர்ணம் செம்பாய் மாற்றியே
சொர்ணப் பாளிகள் மாற்றியே சாஸ்த்தாவின் தனம் ஊற்றியே
ஸ்வர்ணம் கட்டவன் யாரப்பா சகாக்களாணே அய்யப்பா…’ என பாடல் வரிகளில் இடம்பெற்றிருந்தன





