இந்தியாவில் 60 லட்சம் எக்டேர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. அதில் 0.03 சதவீத அளவிற்கு மட்டும் நெல் வயலில் மீன்கள் வளர்க்கப் படுகின்றன.
மீன்வளர்க்க குறைந்தளவு நிலம் போதும். களையெடுக்கவும் மீன்களுக்கு உணவளிக்கவும் ஆட்கள் அதிகம் தேவைப்படாது. நெல் விளைச்சல் அதிகமாக இருக்கும்.
பனிதன், துளசி, சி.ஆர் 26077, ஏ.டி.டி.6,7, ராஜராஜன், பட்டம்பி 15,16 போன்ற நெல் ரகங்கள் மீன் வளர்ப்பிற்கு ஏற்றவை. இந்த ரகங்கள் 180 நாட்கள் வயதுடையது என்பதால் நாற்று நட்டபின் மீன்வளர்ப்பை ஆரம்பிக்கலாம். சம காலத்தில் நெற்பயிரையும், மீன்களையும் வளர்ப்பது ஒருமுறை. அல்லது சுழற்சி முறையில் நெல், மீன் என மாற்றி மாற்றி வளர்க்கலாம். இதற்கு வயலில் வாய்க்கால், அகழி, சல்லடை போன்ற சில ஏற்பாடுகளை செய்ய வேண்டியிருக்கும்.
சுழற்சி முறை வளர்ப்பில் நெற்பயிர் அறுவடை முடிந்த ஓரிரு வாரங்களில் வயலை மீன் வளர்ப்பு குளமாக மாற்றலாம். மீன்களுக்கு தேவையான அளவு 60 செ.மீ வரை நீரின் ஆழத்தைப் பராமரிக்க வேண்டும். கெண்டை இன மீன்களை இம்முறையில் வளர்க்கலாம். 2 முதல் 3 செ.மீ அளவுள்ள குஞ்சுகளை வாங்கி விட்டால் மீனின் வளர்ச்சி 100 கிராம் அளவு இருக்கும் போது அறுவடை செய்யலாம்.





