ஐபிஎல் ஏலம் 2026 வீரர்கள் பட்டியல்.. அடிப்படை விலை என்ன?

ஐபிஎல் 2026 ஏலத்திற்கான வீரர்களின் முழு பட்டியல் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. டிசம்பர் 16 அன்று அபுதாபியில் ஏலம் நடைபெறவுள்ளது. 359 வீரர்களைக் கொண்ட இந்த பட்டியலில் 246 இந்திய மற்றும் 113 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். இதில் 114 சர்வதேச அனுபவம் வாய்ந்த வீரர்களும், 230 இந்திய மற்றும் 15 வெளிநாட்டு அனுபவமில்லாத வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 1390 வீரர்கள் ஏலத்திற்காகப் பதிவு செய்திருந்தனர்.

ஆப்கானிஸ்தான் (10), ஆஸ்திரேலியா (20), பங்களாதேஷ் (7), இங்கிலாந்து (21), அயர்லாந்து (1), நியூசிலாந்து (16), தென் ஆப்பிரிக்கா (16), இலங்கை (12), மேற்கிந்தியத் தீவுகள் (9) மற்றும் மலேசியா (1) ஆகிய 10 நாடுகளிலிருந்து வீரர்கள் ஏலப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். 39 வயதான ஜலஜ் சக்சேனா மூத்த வீரராகவும், 18 வயது நிரம்பிய ஆப்கானிஸ்தானின் வஹிதுல்லா சத்ரான் இளைய வீரராகவும் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன், தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர், இந்தியாவின் வெங்கடேஷ் ஐயர் உள்ளிட்ட 37 வீரர்கள் அதிகபட்ச அடிப்படை விலைப் பிரிவில் உள்ளனர். கிளென் மேக்ஸ்வெல், ஃபாஃப் டு பிளெசிஸ் போன்ற முக்கிய நட்சத்திர வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கவில்லை.

மலேசியாவின் விரன்தீப் சிங், அசோசியேட் நாட்டைச் சேர்ந்த ஒரே வீரர். இவர் 26 வயதான ஆல்ரவுண்டர் வீரர் ஆவார். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் நிகில் சௌத்ரி, சர்வதேசப் போட்டிகளில் ஆடாத இந்திய வீரராகப் பதிவு செய்யப்பட்டுள்ளார். இவர் பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்துடன் பட்டியலிடப்பட்டு, 2017 இல் பஞ்சாபிற்காக உள்ளூர் போட்டிகளில் அறிமுகமானார். பின்னர் ஆஸ்திரேலியா சென்று, பிக் பாஷ் லீக் தொடரில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக விளையாடினார்.

ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 25 வீரர்களை தேர்வு செய்ய முடியும். இந்த ஏலம் மூலம் 77 காலியிடங்களை நிரப்ப முடியும். ஐபிஎல் ஏலம் இந்தியாவிற்கு வெளியே நடைபெறுவது இது மூன்றாவது ஆண்டாகும். 2024இல் துபாயிலும், 2025 மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவிலும் நடந்தது.

மொத்தம் 49 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 173 வீரர்கள் பத்து அணிகளால் தக்கவைக்கப்பட்டனர். அனைத்து அணிகளுக்கும் சேர்த்து ₹237.55 கோடி நிதி ஏலத்தில் செலவிட உள்ளது. கடந்த ஆண்டு இரண்டாம் இடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ் 21 வீரர்களைத் தக்கவைத்துக்கொண்டது. குஜராத் டைட்டன்ஸ் அணி 20 வீரர்களைத் தக்கவைத்துள்ளது. ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், ஷர்துல் தாக்கூர் மற்றும் ஷெர்ஃபேன் ரூதர்போர்டு ஆகிய இருவரையும் டிரேட் செய்து, 20 இடங்களை நிரப்பியுள்ளது. எனினும், ஏலத்தில் செலவிட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகக் குறைவான ₹2.75 கோடி மட்டுமே உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ₹64.3 கோடி நிதியுடன் அதிகபட்ச ஏலத்தொகையைக் கொண்டுள்ளது. இதில் ஆறு வெளிநாட்டு வீரர்கள் உட்பட 13 புதிய வீரர்களை தேர்வு செய்ய முடியும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் ஒன்பது காலியிடங்களை நிரப்ப ₹43.4 கோடியை கைவசம் வைத்துள்ளது. ஐபிஎல் 2025 ஏலத்தில், ரிஷப் பந்த் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் ₹27 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஐபிஎல் வரலாற்றிலேயே மிக விலையுயர்ந்த வீரரானார். கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், அதே 2025 ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸால் ₹26.75 கோடிக்கு வாங்கப்பட்டார். மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் 2024 சீசனுக்கு ₹24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டு, மிக விலையுயர்ந்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

அடிப்படை விலை பிரிவுகளின் பட்டியல்: ₹2 கோடி அடிப்படை விலையில் மொத்தம் 37 வீரர்கள் உள்ளனர். இதில் கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா), டேவன் கான்வே, டேரில் மிட்செல் (நியூசிலாந்து), டேவிட் மில்லர், க்வின்டன் டி காக் (தென் ஆப்பிரிக்கா), வெண்கடேஷ் ஐயர், ரவி பிஷ்னோய் (இந்தியா), வனிந்து ஹசரங்கா, மதீஷ பத்திரனா (இலங்கை) மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் (இங்கிலாந்து) போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ₹1.5 கோடி அடிப்படை விலைப் பிரிவில் எட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் ரஹ்மானுல்லா குர்பாஸ், ஆஸ்திரேலியாவின் ஸ்பென்சர் ஜான்சன், மேத்யூ ஷார்ட், ஜை ரிச்சர்ட்சன் மற்றும் இங்கிலாந்தின் சாகிப் மஹ்மூத் ஆகியோர் இந்த பட்டியலில் அடங்குவர். ₹1.25 கோடி அடிப்படை விலையுடன் நான்கு வீரர்கள் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் பியூ வெப்ஸ்டர், மேற்கிந்தியத் தீவுகளின் ரோஸ்டன் சேஸ், கைல் மேயர்ஸ், மற்றும் இங்கிலாந்தின் ஒளி ஸ்டோன் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர். ₹1 கோடி அடிப்படை விலையில் 25 வீரர்கள் உள்ளனர். இதில் இந்தியாவின் ஆகாஷ் தீப், ராகுல் சஹார், தென் ஆப்பிரிக்காவின் குவின்டன் டி காக், தப்ரைஸ் ஷம்சி, இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ, இலங்கையின் குசல் பெரேரா, சரித் அசலங்கா போன்ற முக்கிய வீரர்கள் ஏலத்திற்கு வருகிறார்கள். ₹75 லட்சம் அடிப்படை விலையில் 43 வீரர்கள் பட்டியலில் உள்ளனர்.

இந்தியா சார்பில் சர்பராஸ் கான், பிருத்வி ஷா, தீபக் ஹூடா, மயங்க் அகர்வால், அயர்லாந்தின் ஜோசுவா லிட்டில், ஆஸ்திரேலியாவின் கிறிஸ் கிரீன், இலங்கையின் குசல் மெண்டிஸ், தாசன் ஷானகா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ₹50 லட்சம் அடிப்படை விலையில் ஐந்து வீரர்கள் உள்ளனர். இந்தியாவின் மஹிபால் லோம்ரோர், துஷார் தேஷ்பாண்டே, யாஷ் தயாள், இங்கிலாந்தின் ஜோ கிளார்க், ஆஸ்திரேலியாவின் ஜாக் எட்வர்ட்ஸ் ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ₹40 லட்சம் அடிப்படை விலைக்கு ஏழு வீரர்கள் ஏலத்திற்கு வருகின்றனர். இந்தியாவின் ராஜவர்தன் ஹங்கர்கேகர், ஜலஜ் சக்சேனா, நிகில் சௌத்ரி, இங்கிலாந்தின் டாம் மூர்ஸ், ஆப்கானிஸ்தானின் அரப் குல் போன்றோர் இதில் அடங்குவர். ₹30 லட்சம் அடிப்படை விலைப் பிரிவில் அதிகபட்சமாக 169 வீரர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் இளம் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் ஆடாத இந்திய வீரர்கள்.

வஹிதுல்லா சத்ரான் (ஆப்கானிஸ்தான்), கோன்னர் எஸ்டர்ஹுய்சென் (தென் ஆப்பிரிக்கா), விரன்தீப் சிங் (மலேசியா) போன்ற வெளிநாட்டு வீரர்களும் இப்பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் பார்க்கப்பட்டவை.

Scroll to Top