சென்னை: மார்கழி மாதம் பிறந்துள்ள நிலையில் காலையிலேயே கோயில்களில் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். வழிபாட்டுக்கு சிறந்த மாதமாக மார்கழி மாதம் பார்க்கப்படுகின்றது. திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு காலையிலேயே பக்தர்கள் அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததோடு, கோயில் முன்பு பஜனை பாடி, ஆடி மகிழ்ந்தனர்.
மார்கழி மாதம் பிறந்துள்ளது. வழிபாட்டுக்கு உகந்த நாளாக மார்கழி மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் அதிகாலையிலேயே எழுந்து பெண்கள் வீட்டின் முன்பு வண்ண கோலமிட்டு வழிபடுவார்கள். ஆண்கள் பஜனை பாடி வழிபடுவார்கள்.
குறிப்பாக திருப்பாவை, திருவெம்பாவை பாடி வழிபாடு செய்வார்கள். மார்கழி மாதம் என்றா முன்பனிக்காலம் என்பதால் குளிர் அதிகமாக இருக்கும். இந்த குளிரிலும் அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு கோயில்களில் பஜனை செய்து ஆடி பாடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். பெருமாள், சிவனை வழிபடுவார்கள். மார்கழி மாதத்தின் 30 நாட்களுமே சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 108 திவ்ய தேச தலங்களில் முதன்மையானதாக திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் இருந்து வருகிறது. இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்கு அம்மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் மட்டும் இன்றி தமிழகத்தின் பிற மாவட்டத்தை சேர்ந்த பக்தர்களும் வருகை தருவார்கள்.
இன்று மார்கழி மாதம் முதல் நாள் என்பதால் காலையிலேயே திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருகை தந்தனர். காலையிலேயே கோயிலில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததோடு, கோயில் முன்பு பஜனை பாடி, ஆடி மகிழ்ந்தனர். இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு கோயில்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை பாடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்களும் காலையிலேயே கோயில்களில் பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர்.





